சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம்


சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:47 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சப்பர ஊர்வலம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இசை போன்றவை நடந்தன.

9-ம் திருவிழாவான நேற்று மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7.20 மணியளவில் சாமியும், அம்பாளும் தட்டு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் பவனி வந்து மீண்டும் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

தேரோட்டம்

காலை 8.20 மணிக்கு அம்பாளுடன் கூடிய சாமியையும், அறம் வளர்த்த நாயகி அம்மனையும், விநாயகரையும் தனித்தனியாக தட்டு வாகனங்களில் எழுந்தருள செய்து மலர்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க எடுத்து வந்தனர். அப்போது கோவில் வாசல் முன்பு போலீசார் துப்பாக்கி ஏந்தி சாமிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

அம்பாளுடன் கூடிய சாமியை பெரிய தேர் ஆகிய சாமி தேரிலும், அறம்வளர்த்த நாயகி அம்மனை அம்மன் தேரிலும், விநாயகரை பிள்ளையார் தேரிலும் எழுந்தருளச் செய்தனர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 8.50 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரும், தொடர்ந்து சாமி தேரும், அம்மன் தேரும் இழுக்கப்பட்டன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.

பக்தர்கள் வெள்ளம்

தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சுசீந்திரத்தில் குவிந்தனர். இதனால் கோவிலை சுற்றி உள்ள நான்கு ரதவீதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்கள் நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த பிறகு நண்பகல் 12 மணிக்கு வெடி முழக்கத்துடன், பெண்கள் குலவையிட நிலைக்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து சாமி அம்பாள், அறம் வளர்த்த நாயகி அம்மன், விநாயகர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகாரம், மோர், பழம், தண்ணீர் மற்றும் அன்னதானம் போன்றவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு நின்றதும் ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சென்றனர்.

சப்தா வர்ணம்

பின்னர் அவர்கள் இரவில் மீண்டும் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு வந்தனர். நள்ளிரவில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் மருங்கூர் முருகப் பெருமான், கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசாமி ஆகியோர் எதிர் எதிரே காட்சி அளிக்க அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது இரு முருகப்பெருமானும், விநாயகரும் தாணுமாலய சாமியை வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னும் அசைந்து அசைந்து செல்வதும் பின்னர் திரும்புவதுமாக பலமுறை நடந்தது.

தொடர்ந்து பெண்கள் குலவையிட்டு மங்கள ஒலி எழுப்ப, மேளதாளம் முழங்க 3 வாகனங்களில் இருந்த சாமிகளும் கோவிலை சென்றடைந்தனர்.

சப்தா வர்ண காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கினர். இதனையடுத்து அதிகாலையில் நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவைெயாட்டி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சுசீந்திரத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் பக்தர்கள் வசதிக்காக கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சுசீந்திரம் தேரோட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம். நேற்று நடந்த தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமைச்சர், எம்.பி.

தேரோட்ட விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி ஜெகதா, வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிவபிரசாத், தெற்கு மண்மடம் திலீபன் நம்பூதிரி, தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், தேவசம் கண்காணிப்பாளர்கள் ஆனந்த், குற்றாலம், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் தாமரை பாரதி, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் சோமு, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அருண் காந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் இ.என்.சங்கர், சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவரும், பேரூராட்சி கவுன்சிலருமான கதிரேசன், சுசீந்திரம் பேரூர் 9-வது வார்டு தி.மு.க. செயலாளர் அழகு தாமோதரன், நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டு வட்டச் செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சொர்ணத்தாய், அக்சயா கண்ணன், தேரூர் பேரூராட்சி தலைவி அமுதா ராணி, பேரூர் செயலாளர் வீரபுத்தரபிள்ளை, சுசீந்திரம் பேரூர் அ.தி.மு.க பொருளாளர் சுபாஷ், பேரூர் கிளைச் செயலாளர் மணி, ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், செண்பகவல்லி, பேரூராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, செயல் அலுவலர் கமலேஸ்வரி, கவுன்சிலர்கள் வசந்தி, நீலாவதி, ஆன்றனிசகாய சுஜிதா, சுரேஷ், தாணுமாலைய பெருமாள், வீரபத்திரப்பிள்ளை, காசி, சுரேஷ், ஆனி எலிசபெத், கலைச்செல்வி, மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், இரவிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி தேவி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, நடராஜன், சரண்யா, வள்ளிநாயகன்பிள்ளை, மணிகண்டன், ஸ்தபதி செல்வராஜா, பா.ஜனதா விருந்தோம்பல் பிரிவு மண்டல தலைவர் ரவீந்திரன், திருக்கோவில் ஒப்பந்ததாரர்கள் மோகன்தாஸ், கண்ணன், கணேசன், மூர்த்தி, வடிவேல் முருகன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் வீரநாதன், பக்த சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.


Next Story