திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் தேரோட்டம் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம்


திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

தெப்பமுட்டுத்தள்ளுதல்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 9-வது நாளான நேற்று காலை 9.20 மணியளவில் தெப்பக்குளத்தில், ``தெப்பமுட்டுத்தள்ளுதல்''நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் எழுந்தருளினார். அங்கு யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

தேரோட்டம்

இதனை தொடர்ந்து திருவிழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி பதினாறு கால் மண்டபம் அருகே சிறிய தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. அதில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தை கார்த்திகையையொட்டி அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தேர் வடத்தினை பிடித்து இழுத்தனர்.

ரத வீதிகளில் தேர்வலம்

தேரானது நிலையில் இருந்து புறப்பட்டு கீழ ரத வீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதிகள் வழியே ஆடி, அசைந்து நிலையை அடைந்தது. அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.திருவிழாவின் சிகரநிகழ்ச்சியாக இன்று தெப்ப உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி காலையிலும், மாலையிலுமாக 2 வேளையில் தெப்பக்குளத்தில் தெப்ப மிதவை தேரில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளுதல் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story