ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
ராஜகோபால சுவாமி கோவில்
பாளையங்கோட்டை வேதநாராயணர், அழகியமன்னார், ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்ம உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்தது. 5-ம் திருவிழாவன்று காலையில் வேதநாராயணர், வேதவல்லி, குமுதவல்லி தாயாருக்கும், அழகியமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும், ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் கருட வாகனத்தில் ராஜகோபால சுவாமி, அழகியமன்னார் வீதி உலா வருதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவில் சுவாமி, தேர் பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7.10 மணிக்கு ராஜகோபால சுவாமியுடன் ருக்மணி, சத்யபாமா தாயாரும் தேருக்கு எழுந்தருளினார்கள். 7.35 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேரோட்டத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் இதில் துணை மேயர் கே.ஆர். ராஜூ, மண்டல தலைவர் பிரான்சிஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் பெருமாள் தெற்கு மாட வீதி வழியாக மேல மாடவீதியில் திரும்பிய போது தேர் சக்கரம் மண்ணில் சிக்கியது. இதையடுத்து உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 20 நிமிடம் தேர் தாமதமாக புறப்பட்டு மாட வீதிகள் வழியாக மீண்டும் ரதவீதிகளை சுற்றி நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று தீர்த்தவாரி
இரவில் சுவாமி தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் வீதிஉலா வருதல் நடந்தது. தேரோட்டம் நடைபெற வசதியாக மின்வாரிய ஊழியர்கள் 4 வீதிகளிலும் மின் வினியோகத்தை நிறுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேரோட்டம் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் மின்வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சப்தாவரணத்தில் அழகியமன்னார், ராஜகோபால சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.