பங்குனி உத்திர விழா:மயிலம் முருகன் கோவிலில் இன்று தேரோட்டம்
பங்குனி உத்திர விழா மயிலம் முருகன் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, வள்ளி, தெய்வானையுடன் முருகன் குதிரை வாகனத்தில் மலை வலம் வரும் காட்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு முதலில் விநாயகர் தேரையும், பிறகு முருகன் தேரையும் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இதையொட்டி, திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள் டாக்டர் தேன்மொழி தலைமையில் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விழாவில் நாளை(புதன்கிழமை) இரவு தெப்பல் உற்சவமும், நாளை மறுநாள் இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 7-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.