தெப்பத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் நாளை தேரோட்டம்
தெப்பத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் நாளை(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்,
தெப்பத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் நாளை(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
நாளை தேரோட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 22-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் இரவில் தினமும் ஒரு வாகனத்திலுமாக தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (30-ந்தேதி) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.
இதனையொட்டி பதினாறுகால் மண்டபம் வளாகத்தில் உள்ள தேர் மீது தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் நகர் வீதிகளில் வலம் வருவதற்காக தேர் தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
தைக்கார்த்திகை
நாளை தைக்கார்த்திகை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நாளை காலை 9.மணிமுதல் 9.30 மணியளவில் தெப்பமுட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி கோவிலில் குவியும் பக்தர்கள் தேரினை வடம்பிடித்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகிறார்கள்.