பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.45 லட்சத்தில் தைப்பூச தேர் புதுப்பிக்கும் பணி
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.45 லட்சத்தில் தைப்பூச தேர் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் தைப்பூசம், வைகாசி விசாகம் ஆகிய திருவிழாக்களின் போது பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றிய 4 ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இந்த திருவிழாக்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை பெரிய தேரிலும், விநாயகர், சண்டிகேசுவரர் சிறிய தேரிலும் வலம் வருவர். இதில் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபடுவர். இந்த தேர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள பெரிய தேரில் சில பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவில் சார்பில் தேரை சீரமைக்க கோவில் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தேர் சீரமைப்புக்கான பெரிய கம்புகள் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து தேர் சீரமைப்புக்கான தச்சு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, பழனி பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள யானை கொட்டகையில் தேர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய அளவிலான இழுப்பை மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் தேர் சீரமைப்புக்காக சேலத்தில் இருந்து தச்சு பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தேரின் சக்கரம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கப்பட உள்ளது. பணிகள் முடிந்தவுடன் சிறப்பு பூஜை நடைபெற்று தேரோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்றனர்.