சிலைகளுடன் கரை ஒதுங்கிய தேர் வடிவிலான மிதவை


சிலைகளுடன் கரை ஒதுங்கிய தேர் வடிவிலான மிதவை
x

ராமேசுவரம் அருகே சிலைகளுடன் தேர்வடிவிலான மிதவை கரை ஒதுங்கியது. அதை மீனவர்கள் வியந்து பார்த்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே சிலைகளுடன் தேர்வடிவிலான மிதவை கரை ஒதுங்கியது. அதை மீனவர்கள் வியந்து பார்த்தனர்.

கரை ஒதுங்கிய மிதவை

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியில் நேற்று தேர் வடிவிலான மிதவை ஒன்று மிதந்து வந்துள்ளது. இந்த மிதவையானது நேற்று மாலை தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கரையை ஒட்டிய கடல் பகுதியில் மிதந்தபடி கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கரை ஒதுங்கி கிடந்த அந்த மிதவையை பார்க்க குவிந்தனர்.

தகவல் அறிந்து கடலோர போலீசாரும் மற்றும் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த மிதவையை பார்வையிட்டனர். மிதவையின் உள்ளே சென்று பார்த்ததில் அந்த மிதவையின் உட்பகுதியில் புத்தர் போன்ற ஏராளமான துறவிகளின் சிலைகள் இடம்பெற்றிருந்தது. சுமார் 3 அடி உயரத்தில் 2 பெரிய சிலைகளும் மற்றும் ஏராளமான சிறிய சிலைகளும் அந்த தேரின் உள் பகுதியில் இருந்துள்ளது. மேலும் அந்த சிலைகளை சுற்றிலும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் அந்த தேரின் முன் பகுதி மற்றும் சுற்றிலும் ஒருவகையான எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளன.

விசாரணை

இது தொடர்பாக கடலோர போலீசார் கூறும்போது:-

தங்கச்சி மடத்தில் கரை ஒதுங்கி உள்ள தேர் போன்ற மிதவையின் உள்ளே புத்தர் போன்ற பல துறவிகளின் சிலைகள் உள்ளன.. பூஜை செய்ததற்கான பொருட்களும் உள்ளன. தேரில் உள்ள எழுத்துக்களை வைத்து பார்க்கும்போது இது சிங்கள மொழியா அல்லது மியான்மர் நாட்டு மொழியா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் அதில் உள்ள எழுத்துக்கள் மியான்மர் நாட்டில் உள்ள எழுத்துக்களை போன்று தெரிகின்றது. கடலுக்குள் புத்தர் போன்ற துறவிகளின் சிலைகளை வைத்து தேர்பவனி முடித்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மிதவையானது பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றத்தால் நங்கூரக் கயிறு அறுந்து கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக இந்த பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்றனர்.


Next Story