அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்தாமரைகுளம்,
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆவணி திருவிழா தேரோட்டம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
11-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பச்சை பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. அப்போது அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவா அரகரா' என்ற கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மதியம் 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு தேர் வந்தது. வடக்கு வாசலில் அய்யா வழி பக்தர்கள் பூ, பழம், பன்னீர், தேங்காய் போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது.
இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி வீதியில் வலம் வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வீதிவலம் வருதல்
நள்ளிரவு அய்யா வைகுண்டசாமி காளை வாகனத்தில் எழுந்தருளி ரதவீதி வலம் வந்து தேர்தடம் பார்த்து பதியின் பள்ளியறைக்கு ெசல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்ட பணிவிடைகளை குரு பால ஜனாதிபதி நிகழ்த்தினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் பள்ளி அலங்கார பணிவிடைகளையும் செய்திருந்தனர்.
திருவிழா நாட்களில் காலை, இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைப்பதி முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குருமார்கள் ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.