பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி திருவிழா


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில்  சதுர்த்தி திருவிழா
x

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் இன்று(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் இன்று(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு இந்த விழா இன்று(திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இன்று காலை கொடியுடன் சண்டிகேசுவரர் கோவிலை வலம் வந்து கொடி மரத்தின் அருகே உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது

தேரோட்டம்

விழாவையொட்டி தினந்தோறும் காலை வெள்ளி கேடய வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 27-ந்தேதி மாலை கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 30-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் தேரோட்டம் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி உற்சவம்

அன்று மாலை முதல் இரவு வரை மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

காரைக்குடி

இதேபோல் காரைக்குடி டி.டி. நகர் பகுதியில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று முதல் 10 நாட்கள் மாலையில் ராஜகணபதி, சிவசக்தி கணபதி, சிவபூஜை கணபதி, குருகணபதி, லெட்சுமி கணபதி, ஸ்கந்த கணபதி, பஞ்சமுககணபதி, சயன கணபதி, சித்திபுத்தி கணபதி, கற்பக கணபதி ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் முத்துக்குருக்கள் செய்து வருகிறார்.


Related Tags :
Next Story