போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
தளி
உடுமலை போலீஸ் நிலையத்தில் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாகனங்கள் சேதம்
உடுமலை காவல் உட்கோட்ட பகுதியில் உடுமலை போலீஸ் நிலையம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் ஏராளமான கிராமங்கள் மற்றும் உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் உள்ளது.
இந்த சாலையில் நடைபெறுகின்ற வாகன விபத்துகள், குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு முன்பும் தனியாருக்கு சொந்தமான இடத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங்கள் முறையான பராமரிப்பு பாதுகாப்பு இல்லாமல் இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது.
மீண்டும் பயன்படுத்த முடியாதநிலை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பல்வேறு குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு முன்பும் தனியாருக்கு சொந்தமான நிலத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தாமல் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து உள்ளனர்.
இதனால் அவை வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது. அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் வாகனங்களில் செடிகள் முளைத்து மண்ணோடு மண்ணாகி மக்கி வருகிறது. இதனால் வழக்கில் தொடர்புடைய நபர்கள் விடுவிக்கப்பட்டாலும் அந்த வாகனத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
திருட்டு போக வாய்ப்பு
அத்துடன் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கேட்பாரற்று பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை போலீசாரும் கண்காணிப்பதில்லை. இதனால் மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் திருட்டு போவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பாதுகாப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதை உரிய முறையில் ஏலம் விட்டு அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதற்கு முன்வர எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.