கள்ளக்காதலி அடித்துக் கொலை


கள்ளக்காதலி அடித்துக் கொலை
x

கொள்ளிடம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(வயது 49). இவருக்கும், கீழவாடி கிராமத்தை சேர்ந்த தமிழ்மணிக்கும்(40) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 17 மற்றும் 11 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவர் மற்றும் மகன்களை பிரிந்த தமிழ்மணி கடந்த சில ஆண்டுகளாக கீழவாடி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

கள்ளக்காதல்

அந்த செங்கல் சூளைக்கு கொள்ளிடம் அருகே உள்ள பாலுரான்படுகை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் செந்தில்(30) வந்து சென்றபோது செந்திலுக்கும், தமிழ்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து செந்தில் வீட்டில் தமிழ்மணி கடந்த சில மாதங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்.

நடத்தையில் சந்தேகம்

இந்தநிலையில் தமிழ்மணியின் நடத்தையில் செந்தில் சந்தேகப்பட்டு மது குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனக்கூறி வீட்டை சுற்றிலும் வலை வேலி போல வைத்து அடைத்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் செந்திலுக்கும், தமிழ்மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில், தமிழ்மணியை கையால் அடித்துள்ளார். மேலும் தமிழ்மணியின் தலையை பிடித்து சுவரில் மோதி உள்ளார். இதில் தமிழ்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து இந்த கொலையை மறைக்கும் விதமாக தமிழ்மணியின் உடலை வீட்டில் உள்ள பிரிட்ஜ் பக்கவாட்டில் மறைத்து வைத்துள்ளார். யாருக்கும் எந்தவித சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பதற்காக டி.வி.யை சத்தமாக வைத்துக்கொண்டு செந்தில் வீட்டில் அமர்ந்து இருந்துள்ளார்.

போலீசாரை பார்த்ததும் தப்பியோட்டம்

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் செந்தில் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் செந்தில் வீட்டிற்கு சென்றனர். போலீசார் தனது வீட்டுக்கு வருவதை தூரத்தில் பார்த்ததும் செந்தில் வீட்டின் பின்பக்கமாக குதித்து அருகில் உள்ள மூங்கில் தோப்பிற்குள் புகுந்து தப்பியோடினார். போலீசார், தமிழ்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மடக்கி பிடித்து கைது செய்த போலீசார்

இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் தப்பி ஓடிய செந்திலை போலீசார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மாதிரவேளூர் கிராமத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை அடித்துக்கொன்று உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்த சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story