கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி


கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி
x

திருச்சி தனியார் விடுதியில் விழுப்புரத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி

திருச்சி தனியார் விடுதியில் விழுப்புரத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அரவிந்தன் (வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அரவிந்தனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அரவிந்தனும், அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்தனர். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் திருச்சி ரெயில்நிலையம் அருகே உள்ள உடுப்பி என்ற தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து அரவிந்தனும், அந்த பெண்ணும் தங்கி இருந்தனர்.

பின்னர் அரவிந்தன் அவரது சகோதரர் தமிழ்செல்வனுக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு நான் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளேன் என்று கூறியுள்ளார். உடனே தமிழ்செல்வன் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அங்கிருந்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விடுதியின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு இருவரும் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story