மனைவியுடன் கள்ளக்காதல்: ஆட்டோ டிரைவரை கொன்ற முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி கைது
தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை கொலை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் சின்னராசு (வயது 35). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்டார்.
இதேபோல் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் புல்லட் ராஜா என்ற நளராஜா(41). இவர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி ஆவார். கடந்த ஜனவரி மாதம் கொலை வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கள்ளக்காதல்
இந்த நிலையில் நளராஜாவின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சின்னராசுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் நளராஜா வெளியே வந்தார். இதையடுத்து அவர் தனது மனைவிக்கும், சின்னராசுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்துள்ளார்.
ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணவேணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சின்னராசு சென்றார்.
குத்திக்கொலை
இதை அறிந்த நளராஜா அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே நின்று கிருஷ்ணவேணியுடன் சின்னராசு பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட நளராஜா அவர்களை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நளராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நளராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
3 பேர் கைது
இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த நளராஜா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் நளராஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.