திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சமையல் மாஸ்டர் கொலை
சீர்காழி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த சமையல் மாஸ்டர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணம் மகன் கனிவண்ணன் (வயது27). இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்றிருந்த இவர் தற்போது ஊருக்கு வந்து சமையல் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சீர்காழி அருகே உப்பனாற்று கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் அவருடைய மோட்டார் சைக்கிளும் நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று கனிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
திருமணம் நிச்சயம்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனிவண்ணன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? யார் கொலையாளிகள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கனிவண்ணனுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.