சமையல்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்
திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் உணவு சமையல் பணி மேற்கொள்ளும் சமையல்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடியில் நேற்று மீதமான உபரி உணவுகளை வீணாக்காமல் உணவு தேவைப்படுபவர்களுக்கு பகிர்வதை ஒருங்கிணைக்க திருமண மண்டப உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தினருடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கி பேசியதாவது:-
திருமண மண்டபங்களில்...
உணவகம் மற்றும் திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை தேவைப்படுவோருக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான வசதிகளுடன் கொண்டு செல்ல வேண்டும். உணவுகளை பாதுகாப்பாக இருப்பு வைத்து சமையல் செய்ய வேண்டும்.
மீதமாகும் உபரி உணவை தேவையானவர்களுக்கு வழங்க ஏதுவாக தொண்டு நிறுவனங்களின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்களை திருமண மண்டபங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
கெட்டுப்போகாத கை மற்றும் எச்சில்படாத உணவுகளை மட்டுமே உணவு தேவைப்படும் ஆதரவற்றவர்களுக்கோ அல்லது உணவு தேவைப்படும் பசித்தோருக்கோ வழங்க வேண்டும். உபரி உணவை பகிர்ந்த விபரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம்
மேலும் தேவையான அளவுக்கு மட்டுமே மூல உணவுப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். அளவாக உணவைப் பரிமாறி, இலையில் உணவு மீதமாவதை தடுக்க வேண்டும். திருமண மண்டபம் மற்றும் கேட்டரிங் செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத சமையலர்களை திருமண மண்டபத்தில் சமைக்க மண்டப உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. திருமண மண்டபங்களில் முக்கிய பகுதிகளில், உணவை பகிர்வோம் என்பது குறித்த விளம்பரமும், தொடர்பு எண்ணும், உணவு பாதுகாப்பு உரிம நகலும் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்' என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.