செம்பூர் ரெயில்வே கேட்டை மூடும் முடிவு கைவிடப்படுமா?


செம்பூர் ரெயில்வே கேட்டை மூடும் முடிவு கைவிடப்படுமா?
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பூர் ரெயில்வே கேட்டை மூடும் முடிவை ரெயில்வே நிர்வாகம் கைவிடுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதையில் ஆழ்வார்திருநகரி அருகே அழகியமணவாளபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது செம்பூர் கிராமம். இங்கு பழமைவாய்ந்த ரெயில்வே கேட் அமைந்துள்ளது. அது அரை நூற்றாண்டை கடந்த பெருமை வாய்ந்தது.

ரெயில்வே கேட் மூட உத்தரவு

சிக்னல் இல்லாத ரெயில்வே கேட்டை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதால், இதுவும் மூடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கு கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. வேறு பாதை ஏற்படுத்தி தருவதாக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட போதிலும் அதை ஏற்க கிராம மக்கள் மறுத்து வருகின்றனர்.

ரெயில்வே கேட்டை நிரந்தரமாக ஏன் மூடக்கூடாது? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பது குறித்து பொதுமக்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

விளைநிலங்கள் அழியும்

செம்பூர் ஊர் தலைவர் சின்னத்துரை:- செம்பூர் ரெயில்வே கேட்டை மூடினால், அருகில் உள்ள ரெயில்வே கேட்டுக்கு செல்ல விளைநிலங்களை அழித்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்க வேண்டி இருக்கும். இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், செம்பூர் ரெயில்வே கேட்டை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். நிர்வாக காரணங்களுக்காக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதையை மூடுவதற்கு எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ரெயில்வே கேட்டை மூடினால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

பல கோடி ரூபாய் செலவு

விவசாயி ராஜேந்திரன்:- எங்கள் ஊர் மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். எங்கள் கிராமத்தை சுற்றிலும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் உள்ளது. வேறு வழிக்காக சாலை அமைக்கும் பட்சத்தில், பல ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால், எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் விளைநிலத்தில் சாலை அமைக்கும் பட்சத்தில், பல கோடி ரூபாய் செலவாகும்.

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதையில் புதிய ரெயில்கள் அறிமுகமாகும்போதும், ரெயில் பாதை நவீனமாகும்போதும் செம்பூர் பகுதியில் ரெயில்வேக்கு எந்த சிரமமும், இடைஞ்சலோ இருந்தது இல்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளில்லாத ரெயில்வே கேட்டாகவே இருந்துள்ளது. அப்போது எந்தவொரு விபத்தும் நடைபெற்றது இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ெரயில்வே கேட் அமைக்கப்பட்டது. அதற்கு செம்பூர் மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து, அந்த வழியை கடந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

வாகன வசதி கிடையாது

செம்பூரை சேர்ந்த ரஜினி:- எங்கள் ஊரில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வாகன வசதிகள் கிடையாது. அதனால் இந்த ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும், வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் பஸ் நிறுத்தத்துக்கு செல்ல சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டியது வரும். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ரெயில் பாதை அமைத்த காலத்தில் இருந்தே இந்த ரெயில்வே கேட் உள்ளது. எனவே, இந்த ரெயில்வே கேட்டை மூடும் முடிவை கைவிடவேண்டும்.


Next Story