'கீமோபோர்ட்' சிகிச்சை முறை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகம்


கீமோபோர்ட் சிகிச்சை முறை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகம்
x

புற்றுநோயாளிகளுக்கு பலன் அளிக்கும் கீமோபோர்ட் சிகிச்சை முறை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை

புற்றுநோயாளிகளுக்கு பலன் அளிக்கும் கீமோபோர்ட் சிகிச்சை முறை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக கிமோதெரபி மருந்தை, கீமோபோர்ட் என்று சொல்லக்கூடிய உடலுக்குள்ளேயே பொருத்தக்கூடிய நவீன கருவிகள், 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை சுமார் 3 ஆண்டுகள் வரை உடலிலே வைத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையானது, புற்றுநோயாளிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் முறையாகும்.

பொதுவாக கைகளில் உள்ள ரத்த நாளங்கள் மூலம் புற்றுநோய் மருந்து செலுத்தப்படுகிறது. அவ்வாறு மருந்து செலுத்தும் போது அது மிகுந்த வலியை கொடுக்கும். மருந்துகள் ரத்த நாளங்களில் இருந்து கசிந்து வெளியே வந்தால் எரிச்சல் முதல் திசு சிதைவு வரை ஏற்படும். ஏன் சில சமயங்களில் கைகளை இழக்கும் அபாயம் கூட ஏற்படும். புற்றுநோயாளிகளுக்கு இப்பொழுதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை கூட மருந்து செலுத்த வேண்டி உள்ளது.

உடலிலேயே கருவி

குறிப்பாக ரத்தப்புற்றுநோய், சில எலும்பு புற்றுநோய், மார்பக புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் நீண்ட நாள் சிகிச்சை மூலம் இந்த நோய்களை நம்மால் குணப்படுத்த முடிகிறது அல்லது வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது. தொடர்ந்து பழைய முறையில் கைகளில் மருந்து செலுத்துவது கடினமான விஷயமாகும். ஏனென்றால், 2,3 முறை மருந்து செலுத்திய பிறகு கைகளில் உள்ள ரத்த நாளங்கள் அடைத்துவிடும். அதன்பின்னர், ரத்த நாளங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது. இவ்வாறு சிரமத்துடன் ரத்த நாளங்களை தேடுவது, ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மிகுந்த வேதனையை கொடுக்கும். தற்போது, உடலிலேயே அந்த கருவி பொருத்தப்படுவதன் மூலம், நோயாளிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் குறையும்.

வரபிரசாதம்

இதுகுறித்து புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

புற்றுநோயாளிகளுக்கு, ஒவ்வொரு முறையும் மருந்து போடும் போது, நோயாளியின் நரம்புகளை தேடி மருந்து போட வேண்டும். ஆனால், இந்த கீமோபோர்ட் கருவியானது, நாணயம் போன்று இருக்கும். இதனை உடலில் தோலின் உள்பகுதியில் பொருத்திவிடுகிறோம். அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மருந்து செலுத்தப்படுகிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காப்பீடு திட்டத்தில் முதல் முறையயாக இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறை புற்றுநோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நோயாளிக்கு அவர்கள் வேதனையை குறைத்து வந்தவுடன் மருந்து போட்டு விட்டு எந்த வலியும் இன்றி எளிதாக செல்லலாம். புற்றுநோய் டாக்டர்களும், எந்த பின்விளைவுகளும் இன்றி சிகிச்சை கொடுக்கலாம். குறிப்பாக நோயாளிகள் காலையில் வந்து மருந்தை செலுத்தி கொண்டு புற நோயாளியாகவே வீட்டிற்கு சென்று விடலாம். எனவே இந்த கீமோபோர்ட் சிகிச்சை முறை அரசு ஆஸ்பத்திரியை நாடி வரும் ஏழை எளிய புற்றுநோய் நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் என்றார்.

உலக புற்று நோய் தினம்

டீன் ரத்தினவேல் கூறுகையில், "தமிழ்நாடு அரசு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துக் காப்பீட்டு திட்டத்தில் இந்த கீமோபோர்ட் வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீமோ போர்ட் சிகிச்சை முறையை உலகப் புற்றுநோய் தினமான இன்று ஏழை நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கிறோம்" என்றார்.


Next Story