செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா புதன்கிழமை தொடங்குகிறது
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா புதன்கிழமை தொடங்குகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளைமறுநாள்(புதன்கிழமை) தொடங்கி, 15-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
பங்குனி திருவிழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 15 ந்தேதி (சனிக்கிழமை) தெப்பத் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
இவ்விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் அவரது அலுலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், தாசில்தார் சுசிலா, நகரசபை ஆணையாளர் ராஜாராம், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ்குமார், தீயணைப்பு படை அதிகாரி சுந்தரராஜ், அரசு போக்குவரத்து மேலாளர், மருத்துவர்கள், மின்வாரிய பொறியாளர்கள், கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுகாதார வசதி
கூட்டத்தில், திருவிழா நாட்களில் கோவில் ரத வீதிகள், மாதாங் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, தெற்கு பஜார் பகுதிகளில் துப்புரவு பணிகள் செய்ய வேண்டும். தேரோட்டம் நடைபெறும் 13-ந்தேதி, தீர்த்த வாரி திருவிழா நடக்கும் 14-ந் தேதிதேதி, தெப்ப திருவிழா நடக்கும் 15-ந்தேதி ஆகிய 3 நாட்களில் கோவில் மாட வீதிகள், ரத வீதிகள், கோவில் பின்புற மைதானம், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள இடங்களில் துப்புரவு செய்து சுகாதார வசதிகள் செய்து கொடுத்திடவும், தண்ணீர் பந்தல் அமைப்பவர்களுக்கு குடிதண்ணீர் வசதி செய்திடவும், கோவில் ரத வீதிகளில் வெப்பத்தை தணிக்க டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் தெளித்து விடவும் முடிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை சார்பில் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மருத்துவ முகாமும், நடமாடும் மருத்துவக் குழுவும் அமைத்திட முடிவு செய்யப்பட்டது. தேரோட்டம், தீர்த்தவாரி அன்று எட்டையபுரம் ரோடு, மாதா கோவில் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்திடவும், பாதுகாப்பு பணிக்கு 350 போலீசாரை ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.