கோடை விடுமுறை முடிந்து திரும்புவதால் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சென்னை விமான நிலையம்


கோடை விடுமுறை முடிந்து திரும்புவதால் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சென்னை விமான நிலையம்
x

கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவதால் பயணிகள் கூட்டத்தால் விமான நிலையம் நிரம்பி வழிகிறது. இதனால் விமான கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

மீனம்பாக்கம்,

கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றிருந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ந் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன.

இதனால் வெளியூர் சென்றிருந்தவர்கள் குடும்பத்துடன் மீண்டும் சென்னை நகருக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். இதனால் பஸ்கள், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயிலில் முன்பதிவுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் காத்திருப்போர் பட்டியல் 300 வரை தாண்டிவிட்டது.

கட்டணம் உயர்வு

இதனால் பயணிகள் விமானங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் பெருமளவு அதிகரித்து உள்ளது.

இதனால் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை-சென்னை இடையே சாதாரண நாட்களில் ரூ.3,629 ஆக இருந்த கட்டணம் தற்போது ஞாயிறு முதல் செவ்வாய் வரை ரூ.8,478 வரை உயர்ந்துள்ளது.

நிரம்பி வழியும் பயணிகள்

அதேபோல் தூத்துக்குடி-சென்னைக்கு சாதாரண நாட்களில் ரூ.4,401 ஆக உள்ள கட்டணம் ரூ.8,062 வரையும், திருச்சி-சென்னைக்கு ரூ.2,718 ஆக இருக்கும் கட்டணம் ரூ.6,865 வரையும், திருவனந்தபுரம்-சென்னைக்கு ரூ.3,225 ஆக உள்ள கட்டணம் ரூ.10,225 வரையும், கொச்சி-சென்னை இடையே ரூ.2,889 ஆக உள்ள கட்டணம் ரூ.8,357 வரையும் உயர்ந்து உள்ளது.

இவ்வாறு விமான கட்டணங்கள் திடீரென பல மடங்கு அதிகரிக்கப்பட்டாலும், பயணிகள் கட்டணங்களை செலுத்தி சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.


Next Story