சென்னை: அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - மேயர் பிரியா வேண்டுகோள்
சென்னையில் அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.
சென்னை,
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினமானது 'சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா' என கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சார்பில் வருகிற ஆகஸ்டு 13, 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13 முதல் 15-ந் தேதி வரை 3 நாட்களும் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றுவது தொடர்பாக மண்டலக்குழுத் தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது, அனைத்து வார்டுகளிலும் கவுன்சிலர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக தேசியக் கொடியினை ஏற்பாடு செய்து தரவும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் வேண்டும் என மண்டலக்குழு தலைவர்களிடம் மேயர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார், வட்டார துணை ஆணையாளர்கள் டி.சினேகா, எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.