ரூ.24.92 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்


ரூ.24.92 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
x

ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.24.92 கோடியில் புனரமைக்கப்பட்டது.

மேலும் இங்கு ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் 5 எல்.இ.டி. திரைகளுடன் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in இணையதளம் மேம்படுத்தப்பட்டது. இவற்றின் திறப்பு மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புனரமைக்கப்பட்ட இந்த தலைமை அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். பின்னர் அவர், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினையும், மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார்.

செயல்பாடுகள் நேரடி கண்காணிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் விளக்கினார்.

எல்.இ.டி. திரையில் பதிவான தகவல்களை சுட்டிக்காட்டி அவர் கூறியதாவது:-

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அனைத்து செயல்பாடுகளையும் இந்த மையத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கலாம். சென்னை குடிநீர் வாரியத்திடம் 418 லாரிகள் இருக்கிறது. இதன் மூலம் 8 ஆயிரத்து 850 தெருக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

குடிநீர் பகிர்மான நிலையங்களை இங்கிருந்தபடி கண்காணிக்கலாம். குடிநீர் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த லாரிகள் மூலம் சரியான இடத்துக்கு சென்று தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறதா? என்பதை இங்கிருந்து பார்க்கலாம்.

537 கழிவுநீரகற்று வாகனங்கள் உள்ளது. இதில் மக்கள் புகாரின் பேரில் எந்தெந்த வாகனங்கள் எங்கு சென்று உள்ளது. எத்தனை வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கழிவுநீர், குடிநீருக்கு...

மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்து வாரியத்தின் செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:-

இந்த இணையதளத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டத்தை தெரிந்துக்கொள்ளலாம். முக்கியமான 6 ஏரிகளின் மொத்த கொள்ளவு 13.2 டி.எம்.சி. ஆகும். இன்றைய தேதியின் படி (நேற்று) 10.2 டி.எம்.சி. தண்ணீர் நிரப்பி உள்ளது. மொத்தம் 77 சதவீதம் தண்ணீர் இருப்பு இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தண்ணீர் சப்ளை செய்யலாம். குடிநீர் வாரியத்தின் சேவைகளை இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் பெறலாம்.

கழிவுநீர், குடிநீர் புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். புகார்களை பதிவு செய்யலாம். குடிநீர் வரியை செலுத்தலாம். குடிநீர் லாரிகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்று- குறும்படம்

அதிகாரிகள் அளித்த இந்த விளக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து இந்த வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர், இந்த வாரியத்தின் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்ட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு குடிநீ வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பா.பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story