கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி...! ஆனால் ஒரு நிபந்தனை...


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி...! ஆனால் ஒரு நிபந்தனை...
x
தினத்தந்தி 30 Nov 2022 9:33 AM GMT (Updated: 30 Nov 2022 9:41 AM GMT)

கனியாமூர் தனியார் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்துக்குத் திறக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கடந்த ஜூலை 17-ந்தேதி கலவரத்தில் முடிந்தது. இதில் வகுப்பறையில் இருந்த பொருட்கள் சேதமானதால் பள்ளி மூடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளியை நிா்வகிக்கும் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணை முடிவில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளைத் தொடங்க பள்ளி நிா்வாகத்துக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு அப்போதைய நிலைமையை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

கனியாமூர் பள்ளியைத் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, டிச.5 முதல் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளார்.

மேலும், பள்ளியில் உள்ள ஏ பிளாக்கின் மூன்றாவது தளத்தை சீல் வைக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.


Next Story