சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கலந்துரையாடல்
ஆராய்ச்சி திறனை உருவாக்கும் திட்டம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.
ஊட்டி
ஆராய்ச்சி திறனை உருவாக்கும் திட்டம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
சென்னை ஐ.ஐ.டி. சார்பில் அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் ஆராய்ச்சி திறனை உருவாக்குவது ஆகும். அறிவியல் அறிவை பெருக்கி கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும், தாங்களும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து ஊட்டி அரசு கலை கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஷோபனா வரவேற்றார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) லூர்து மேரி தலைமை தாங்கினார். சென்னை ஐ.ஐ.டி. சமூக முன்னெடுப்புகள் மற்றும் வெளியுறவு தொடர்பு தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
சந்தேகங்களுக்கு விளக்கம்
மாணவ-மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி பயணம் எவ்வாறு இருக்க வேண்டும், என்னென்ன வேலைகளில் ஈடுபடலாம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ-மாணவிகள் சுலபமாக வீட்டில் இருந்தபடியே ஐ.ஐ.டி. மூலம் கல்வி கற்கக்கூடிய வாய்ப்புகள் என்ன?, இலவசமாக கல்வி கற்பித்து கொடுக்கும் நிறுவனங்கள் பற்றி விரிவான தகவல்கள் குறித்து விளக்கி பேசினார். மேலும் அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். என்ற திட்டத்தின் கீழ் ஐ.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பாக டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பற்றியும், அதில் இணைவது பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு முழுமையாக விளக்கினார்.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பேசினார். இதில் நுண்கலை மன்ற பொறுப்பாளர்கள் மோகன், ஓம்முருகன், ராஜேஷ், ஷானு, அனுசுயா, ஹேமலதா, ஜெனத் பிரிதஸ் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரலாற்றுத்துறை தலைவர் கனகாம்பாள் நன்றி கூறினார்.