கடன் தொல்லையால் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலையா? போலீசார் விசாரணை


கடன் தொல்லையால் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலையா? போலீசார் விசாரணை
x

தீயில் கருகி பலியான சென்னை இன்ஸ்பெக்டர், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளியை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 42). சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றபிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான வீடு, பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ளது. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். மகன் ஸ்ரீராம்வர்சத், உடுமலையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் நல்லூரில் உள்ள சபரிநாத்துக்கு சொந்தமான வீட்டின் தரைத்தளத்தில் கணவரை பிரிந்த சாந்தி (37) என்பவர், தனது மகன் அஷ்வினுடன்(15) வசித்து வந்தார். மேலும் முதல் தளத்தில் உள்ள வீட்டை சபரிநாத் பயன்படுத்தி வந்தார். அவர், சென்னையில் இருந்து கடந்த 7-ந் தேதி விடுப்பில் பொள்ளாச்சிக்கு சென்றிருந்தார்.

உடல் கருகி சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இன்ஸ்பெக்டர் சபரிநாத், அவருக்கு உதவி செய்ய வந்திருந்த சாந்தி ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் எதிர்பாராத தீ விபத்து காரணமாக 2 பேரும் இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அத்துடன், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சபரிநாத், சாந்தி ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உடலில் பெட்ரோலை ஊற்றியதோடு கியாசை திறந்து விட்டு சபரிநாத் தீ வைத்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் தொல்லை

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்) வெடித்து தீப்பிடித்ததில் 2 பேரும் இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இருப்பினும் சபரிநாத், சாந்தி ஆகியோரின் உடல்கள் கருகிய நிலையில் கிடந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. பிரிட்ஜ் வெடித்தால் இந்த அளவுக்கு உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. பிரேத பரிசோதனையில் பெட்ரோலை உடலில் ஊற்றியதோடு கியாசை திறந்துவிட்டு தீ வைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது மனைவியின் சிகிச்சைக்காக ரூ.3 கோடி வரை சபரிநாத் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை திரும்ப செலுத்த முடியாமல் மன விரக்தியில் இருந்துள்ளார். இதனால் சபரிநாத் பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு கியாசை திறந்து விட்டு தீ வைத்து தற்கொலை செய்து இருக்கலாம். அப்போது அங்கு சென்ற சாந்தியும் தீயில் சிக்கி உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அறிக்கை வந்த பிறகு...

அதேநேரத்தில் பிரேத பரிசோதனை, தடவியல் நிபுணர்கள், தீயணைப்பு துறை அறிக்கைகள் வந்த பிறகுதான், முழு காரணம் குறித்து தெரிவிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறினார்.


Next Story