சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்கள்: முதல் நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்


சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்கள்: முதல் நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று முதல் புறப்பட்டன. முதல் நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணித்தனர்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 12-ந்தேதி (நேற்று) முதல் 14-ந்தேதி வரையிலான 3 நாட்கள் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

அதேபோல பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, 16-ந்தேதி முதல் 18-ந் தேதிவரை, தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 4,334 சிறப்புப் பஸ்களும், மற்ற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,965 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 599 பஸ்களும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரெயில்களில் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களையே பயணிகள் பெரிதும் நம்பியிருந்தனர்.

சொந்த ஊர்களுக்கு பயணம்

அதன்படி, சென்னையில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் வெளியூர்கள் நோக்கி புறப்பட்டன. பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சென்னையில் கோயம்பேடு தவிர கூடுதலாக 5 இடங்களில் இருந்து பஸ்கள் புறப்பட வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன்படி கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக்கழக பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ்நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முதல் நாளான நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 651 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 2,751 பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

இன்றும், நாளையும்...

13-ந்தேதி (இன்று) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 1,855 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3,955 பஸ்களும், 14-ந்தேதி (நாளை) வழக் கமாக இயக்கப்படும் 2,100 பஸ் களுடன் 1,943 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 4,043 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பஸ்கள் உள்பட 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து புறப்படும் வெளியூர் பஸ்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story