ரூ.50 கோடி சொத்து அபகரிப்பு புகாரில் சென்னை பெண் வக்கீல் கைது
சென்னையில் ரூ.50 கோடி சொத்து அபகரிப்பு புகாரில், பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தனியார் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் உள்ளது. இதற்கு நிர்வாக ஜெனரல் என்ற பெயரில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் அதிகாரி ஒருவர் தலைவராக உள்ளார். இந்த அமைப்பின் பாதுகாப்பில் சென்னை கெல்லீஸ் மேடவாக்கம் டேங்க் சாலை, வரதராஜபுரம் கார்டன் பகுதியில், ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள 40 கிரவுண்டு காலி மனை சொத்து உள்ளது.
இந்த சொத்துக்களுக்கு சென்னை கொளத்தூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது 82) என்பவர் சொந்தம் கொண்டாடினார். மேற்படி சொத்துக்களை தனது மகள் நாகலட்சுமிக்கும், பேத்தி ரெஜிலாஸ்ரீ (40) என்பவருக்கும் எழுதி வைத்துள்ளார். ரெஜிலாஸ்ரீ சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.
மேற்படி நிலத்தை அபகரித்ததாக, சென்னை ஐகோர்ட்டின் மேற்கண்ட அமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மறைந்த கந்தசாமிநாயுடு என்ற பெரும் பணக்காரருக்கு சொந்தமான சொத்துதான் மேற்கண்ட சொத்து என்று தெரிகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி, இவரது பெயரில்தான் செயல்படுகிறது.
வக்கீல் கைது
ஐகோர்ட்டு அமைப்பு கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் மீனா ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையிலான தனிப்படை போலீசார், மாரியம்மாள், அவரது மகள் நாகலட்சுமி மற்றும் வக்கீல் ரெஜிலாஸ்ரீ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் நாகலட்சுமி இறந்து போனார். மாரியம்மாள் வயது மூப்பு காரணமாக கைது செய்யப்படவில்லை. வக்கீல் ரெஜிலாஸ்ரீ மட்டும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட தகவலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.