சேரக்குளத்தில் பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட கோரிக்கை


சேரக்குளத்தில்  பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட கோரிக்கை
x

சேரகுளத்தில் பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

சேரகுளத்தில் பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கருங்குளம் ஒன்றியம் சேரகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சேரகுளம் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு இருந்த வகுப்பறையில் ஒருபகுதி மிகவும் சேதம் அடைந்து இடிக்கப்பட்டு விட்டது. மற்றொரு பகுதியும் தற்போது மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகின்றனர். ஆகையால் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சுடலைமணி தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் குலசேரகன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்ற விழா ஆகும். இந்த விழாவில் 11-ம் திருநாளான கொடிப்பட்டம் இறக்கி காப்பு களையும் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சுகாதார நிலையம்

தமிழ்மாநில காங்கிரஸ் நேருகாலனி கிளை செயலாளர் ஆறுமுகம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாளமுத்துநகர் பகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளையூரணி சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆகையால் மக்கள் நலன் கருதி தாளமுத்துநகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள காலிமனையில் பொது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அதே போன்று தாளமுத்துநகர் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரியும் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story