செஸ் ஒலிம்பியாட் போட்டி: 7 மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து


செஸ் ஒலிம்பியாட் போட்டி: 7 மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் சிறப்பாக நடைபெற 7 மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு 7 மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44-வது சர்வதேச செஸ் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்கள். இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு, சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், ஆகியோர் சர்வதேச செஸ் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு செஸ் போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அரியானா முதல்-மந்திரி மனேகர் லால் கட்டார் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேச செஸ் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story