செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட அரசு விளையாட்டு விடுதி மாணவிகள், குமலன் குட்டை அரசு பள்ளிக்கூட மாணவர்கள், வீரப்பன்சத்திரம் அரசு பள்ளிக்கூட மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானம் வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் கொடி அசைத்து தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளை வாழ்த்தினார். ஊர்வலம் சுவஸ்திக் கார்னர், அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று மீண்டும் வ.உ.சி.பூங்காவை அடைந்தது.
தொடர்ந்து மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதனை ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியையொட்டி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 236 மாணவ-மாணவிகளுக்கு சதுரங்கபோட்டி நடத்தப்பட்டது. இதையொட்டி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார், சைக்கிள் அசோசியேசன் செயலாளர் சிவசங்கர், விளையாட்டு விடுதி மேலாளர் பொற்கொடி, பயிற்சியாளர்கள் சத்யா, கண்மணி தேவி, மைதிலி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.