செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி
x

1,000 மாணவர்கள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

1,000 மாணவர்கள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு செஸ் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள் விளையாட்டு அரங்கில் 1,000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்துக்கு பெருமை

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்த அனுமதி பெற்று, அதனை எந்த மாநிலத்தில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெற்று வருவதால், தமிழகத்தில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இது நமக்கு பெருமையாக உள்ளது.

187 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் நமது மாநிலத்தில் வந்து செஸ் போட்டியில் விளையாடுவது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. விளையாட்டு துறையையும், வீரர்களையும் ஊக்கப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இங்கு விழிப்புணர்வு ெசஸ் போட்டியில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவிகள் திறமைகளை வளர்த்து ஒலிம்பியாட் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு வாகனம், ஊர்வலம்

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பள்ளிக்கூட வாகனங்களை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் நடைபெற்ற மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரசு அருங்காட்சியகத்தில் நிறைவடைந்தது.

கலந்து கொண்டவர்கள்

வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர் பால்குமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைடஸ் ஜான் போஸ்கோ, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்

தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பணகுடியில் நடந்தது. முகாமை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலவாரிய இணை இயக்குனர் ஹேமா முன்னிலை வகித்தார். பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன் வரவேற்றார்.

இதில் பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், துணைத் தலைவர் புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story