'செஸ் ஒலிம்பியாட்' போட்டி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயருகிறது: முதல்-அமைச்சர் பெருமிதம்


செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயருகிறது: முதல்-அமைச்சர் பெருமிதம்
x

18 மாத ஏற்பாடுகளை 4 மாதங்களில் செய்து முடித்துள்ளோம் என்றும், செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயருகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

இந்த விழாவுக்காக அழைப்பிதழோடு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் நேரில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் தொடர்பு கொண்டார். நலம் விசாரித்த அவரிடம் என்னுடைய நிலையை விளக்கினேன். அப்போது அவர், 'நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நான் நிச்சயம் கலந்துகொள்வேன்' என்று பெருந்தன்மையோடு சொன்னார். இந்த விழாவானது இந்தியாவுக்கே பெருமைதரக்கூடிய விழா என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்தவகையில் பிரதமர் இங்கே வந்திருக்கிறார்.

இந்த போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக 18 துணைக்குழுக்களை தமிழ்நாடு உருவாக்கியது. இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு, குறைந்தது 18 மாதங்கள் ஆகும். ஆனால் நான் பெருமையோடு சொல்கிறேன். நான்கே மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. இதற்கு காரணமான அமைச்சர் மெய்யநாதனையும், விளையாட்டுத்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் மனதார வாழ்த்துகிறேன்.

தமிழக அரசின் மதிப்பு உயருகிறது

44-வது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது உலகளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. இந்த போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மட்டுமல்ல, சுற்றுலாத்துறையும், தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது. இன்னும் சொன்னால், தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழக அரசின் மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும் உயருகிறது. இந்த உயர்வு என்பது மிக சாதாரணமாக கிடைத்து விடுவது அல்ல. சரியான திட்டமிடல், கடின உழைப்பு அதன் விளைவே இந்த உயர்வு.

இந்திய துணைகண்டத்தில் முதல்முறையாகவும், ஆசிய கண்டத்தில் 3-வது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடந்துள்ளன. கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முன்னரே, இந்திய துணை கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுவதும் 'செஸ்' என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில, சில மாறுதல்களோடு, உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது. தொடக்க விழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக இயற்கை எழில் கொஞ்சக்கூடிய மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது.

தொடர்ந்து வாய்ப்புகளை தாருங்கள்

இந்தியாவில் உள்ள 73 செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் 36 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. செஸ் போட்டி என்பது புத்திகூர்மை, சாதுர்யத்தை உள்ளடக்கியது. போட்டியில் தமிழகம் சிறந்து விளங்குவது பெருமை அளிக்கிறது. இதன்மூலம் சென்னையை இந்தியாவின் செஸ் தலைநகரம் என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

செஸ் என்பது விளையாட்டு போட்டியாக, விளையாட்டு விழாவாக அல்ல, இந்தியாவில் நடைபெறும் பண்பாட்டு திருவிழாவை போன்று ஒரு சகோதரத்துவ மனப்பான்மையோடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தகைய விழாவை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி சொல்கிறேன். இதுபோன்ற வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தாருங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு அரசன், ஒரு அரசி, 2 அமைச்சர்கள், 2 குதிரைகள், 2 கோட்டைகள், 8 சிப்பாய்கள் என கருப்பு-வெள்ளை ராணுவ மைதானமாக காட்சியளிப்பது சதுரங்கம். கீழடியை பற்றி நான் அதிகம் விளக்க தேவையில்லை. பல்லாயிரம் ஆண்டு பழமைகொண்ட தமிழினம் வாழ்ந்த பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. கீழடியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தால் ஆன காய்கள் அவை. இவ்வகையான பொருட்கள் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாட பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

போர் கலையாக சொல்லப்படும் விளையாட்டு

இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு, வெள்ளையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தக்கூடிய சில்லுகள் கருப்பு, சிவப்பு கொண்டவையாக உள்ளன. போரில் யானையும், குதிரையும் உண்டு. கோட்டையும், வீரர்களும் உண்டு. அரசனும், அரசியும் உண்டு. போர் மரபுக்கும், தமிழருக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்கு சொல்கிறது. ஆணைக்கூப்பு என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் உண்டு.

ஆணைக்கூப்பு ஆடுவதை போல என நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது. அறிவுக்கூர்மையும், வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது. அறிவுதான் இறுதிக்காலம் வரை காப்பாற்றும் என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன திருவள்ளுவர் மண்ணில் இந்த போட்டி தொடங்குகிறது. செஸ் ஒரு காலத்தில் அரசர்களுடைய விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. இது மூளை சார்ந்த போர் கலையாக சொல்லப்படும் விளையாட்டு.

அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டை தமிழகம், இந்தியாவில் மேலும் பரவ செய்ய இந்த போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். குறிப்பாக அறிவுத்திறனை பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும். அதற்கு இந்த ஒலிம்பியாட் போட்டி தொடக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கதர் ஆடையில் மோடி... பட்டு உடையில் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான கதர் வேட்டி-சட்டையில் மிடுக்காக வந்தார். அவர் அணிந்திருந்த துண்டிலும், வேட்டியின் கரையிலும் செஸ் போர்டை குறிக்கும் கருப்பு-வெள்ளை நிறங்கள் இடம்பெற்றிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

அதேபோல தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி-சட்டையில் கம்பீரமாக கலந்துகொண்டார்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற இந்த விழாவில், நாட்டின் பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழரின் பாரம்பரிய உடையை அணிந்தது உலக அரங்கில் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.


Next Story