செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு: வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்


செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு: வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்
x

கோலாகல கலைநிகழ்ச்சியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் வழங்கினார்.

சென்னை,

95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது.

இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

நிறைவு விழா

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் ஆனது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் 1-வது அணியும் பெற்றது.

இந்தநிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, தொடக்க விழா நடைபெற்ற அதே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடந்தது. நிறைவு விழாவின் தொடக்கமாக, பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இசை நிகழ்ச்சி

நிகழ்ச்சியின் தொடக்கமாக, 'இந்தியாவின் இதயத்துடிப்பு' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்யா, ஸ்டீபன் தேவசி, நவீன் ஆகியோர் பங்கேற்று இசை கருவிகளை மீட்டு அசத்தினார்கள்.

இடையில், சிவமணி டிரம்ஸ் இசைத்துக்கொண்டே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த இடம் நோக்கி சென்றார். அப்போது, ஒரு குச்சியை அவரும் வாங்கி சிவமணியுடன் டிரம்ஸ் இசைத்தார். அவரைப்போல், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச்சும் டிரம்ஸ் வாசித்தார்.

பறந்த பியானோ

அடுத்து, வெளிநாட்டு பெண் கலைஞர் ஒருவர் பியானோவுடன் பறந்தபடி, அதை வாசித்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். தொடர்ந்து, டிரம்ஸ் கலைஞர்கள் மின்னொளியிலான ஆடைகள், டிரம்ஸ்சுடன் வந்து பறந்தபடி இசையமைத்து மேலும் பரவசப்படுத்தினர்.

தொடர்ந்து வந்த கலைஞர்கள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை நாட்டியமாடியே விளக்கி அசத்தினர். அதன் பின்னர், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைத்தது குறித்து, காட்சி மூலம் விளக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்

கலைநிகழ்ச்சிகளுக்கு இடையே, இரவு 7.15 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா தொடங்கியது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய செஸ் அணியின் ஆலோசகர் விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இயக்குநர் பாரத்சிங் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.

பாராட்டு சான்றிதழ்

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை 30 பாடகர்கள் ஒன்றாக பாடினர். அதன்பின்னர், தலைமைச்செயலாளர் இறையன்பு அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்கான பாராட்டு சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் வழங்கினார்.

மானுவேல் ஆரோன்

தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இயக்குநர் பாரத்சிங் சவுகான், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் ஆகியோர் பேசினர். அடுத்து, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவேல் ஆரோன் மேடைக்கு அழைத்து சிறப்பிக்கப்பட்டார்.

பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு, ஆ.ராசா எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

விருதுகள்

அதன்பின்னர், இந்திய செஸ் அணியின் ஆலோசகர் விஸ்வநாதன் ஆனந்த் பேசினார். தொடர்ந்து, சிறப்பாக சீருடை அணிந்து வந்து போட்டிகளில் பங்கேற்ற டென்மார்க் (பெண்கள்), உஸ்பெகிஸ்தான், மங்கோலியா (ஆண்கள்) அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்..

பின்னர், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, போட்டிகளில் உண்மையான உத்வேகத்துடன் நேர்மையாக விளையாடியதற்கான விருது ஜமைக்கா வீரருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார்.

பதக்கங்கள்

அதையடுத்து, தமிழக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.. அதன்பின்னர், சிறந்த உடைக்கான (பெண்கள்) விருது உகாண்டா வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 5 போர்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர், இந்திய விடுதலை வரலாறு 'தமிழ் மண்' பாகம்-2-ஐ கமல்ஹாசன் குரல் பின்னணியில் கலைஞர்கள் கண்முன்னே நடித்து காண்பித்து அசத்தினர். தொடர்ந்து, "வீ அன்பீட்டபிள்" குழுவினர் நடத்திய வித்தியாசமான நடன நிகழ்ச்சி அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்தது.

மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அதன்பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து, விழாவின் முத்தாய்ப்பாக, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தையும், அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கத்தையும், ஜார்ஜியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 1-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. தங்கப்பதக்கம் வென்ற அணிகளுக்கு கூடுதலாக கோப்பையும் வழங்கப்பட்டது.

தேசிய கொடியுடன் வந்த வீரர், வீராங்கனைகள்

வீரர்கள், வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பதக்கம் பெற வந்தபோது, தங்கள் நாட்டு தேசிய கொடியை கையில் ஏந்தியபடி மிடுக்குடன் வந்து பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, ஓபன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் நாட்டின் தேசிய கீதமும், பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற உக்ரைன் நாட்டின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து, அவர் முன்னிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடியானது, மரபுப்படி இறக்கப்பட்டு, அடுத்து 2024-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் நாடான ஹங்கேரியிடம் வழங்கப்பட்டது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு கீதம் இசைப்பு

அதனைத்தொடர்ந்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீதம் பாடப்பட்டது. பின்னர், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்ததை அறிவிக்கும் வகையில், ஜோதி அணைக்கப்பட்டது.

நிறைவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா நன்றி கூறினார். 30 கலைஞர்கள் தேசிய கீதம் பாட விழா இனிதே நிறைவடைந்தது.

பங்கேற்றவர்கள்

விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சரின் குடும்பத்தினர், சிறப்பு பணி அலுவலர் தாரேஸ் அகமது, சர்வதேச செஸ் வீரர்கள் - வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை.

நாடு திரும்புகிறார்கள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்ததையொட்டி, அதில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்புகின்றனர். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

அடுத்ததாக, 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2024-ம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடக்கிறது.


Next Story