சென்னையில் செஸ் ஒலிம்பியாட் : ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை அளிக்கும் நிகழ்வு - சரத்குமார் வாழ்த்து
செஸ் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசு, துரிதமாக சிறப்பான முறையில் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச அரங்கில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் கூடுதல் புகழ் சேர்க்கும் விதமாக, பன்னாட்டு செஸ் கூட்டமைப்பின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதன் முறையாக, குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற இருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் மிகவும் பெருமையளிக்கும் நிகழ்வாகும்.
தமிழக பாரம்பரிய, கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாகவும், தமிழ்நாட்டின் சிறப்பை உலகத்தினர் வியந்து பார்க்கும் வகையிலும் குறுகிய காலத்திற்குள் செஸ் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசு, துரிதமாக சிறப்பான முறையில் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
இப்போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்து 800 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதால், சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நாட்டு மக்களிடையே தமிழகமும், சென்னையும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சர்வதேச நாடுகளில் இருந்து சென்னை வரும் அனைத்து போட்டியாளர்களும், செஸ் போட்டியின் போது, தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி, வெற்றி பெற்று சிறப்படைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.