செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
ஜூலை 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை,
மாமல்லபுரத்தில் இம்மாதம் 28-ந்தேதி முதல் அடுத்த ஆகஸ்டு 10-ந்தேதிவரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் விட்டுச்செல்லவும், அங்கிருந்து அழைத்துச்செல்லவும் பேருந்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் விளக்கினார். சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதுகுறித்த விவரங்களை முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ந்தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி வியாழக்கிழமை அன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு இன்று அறிவித்தார்.
மேலும், ரஷிய செஸ் கூட்டமைப்பினர் மற்றும் அவர்களுடன் வேறு சில நாட்டவர்களும் "செஸ் ஒலிம்பியாட்" நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை இன்று ஆய்வு செய்தனர்.