செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா: பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, வழிநெடுக ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சிகள் நடத்தி கலைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று மாலை 5.10 மணிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்துக்கு வந்தார். அங்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் அனுராக் தாக்குர், எல்.முருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
உற்சாக வரவேற்பு
ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் நோக்கி புறப்பட்டார். நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, சென்டிரல் வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு கார் செல்லும்படி வழித்தடம் திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் காரில் வரும் வழிகளில் ஆங்காங்கே பா.ஜ.க.வினர் திரண்டு காரின் மீது மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நாதஸ்வர கச்சேரி, ஆடல்-பாடல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் என அட்டகாசமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றியபடி கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள 'நம்ம சென்னை' அடையாள சின்னம் அருகே பிரதமர் நரேந்திரமோடி நடந்து வருவது போன்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மேள, தாளம் முழங்க கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் மெரினா சாலையில் பல இடங்களில் பாரதியார், பாரதமாதா வேடத்திலும் கலைஞர்கள் நின்று கொண்டு வரவேற்பு அளித்தனர். பா.ஜ.க.வினரும் திரண்டு 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை எழுப்பியபடியும் ஆர்ப்பரித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு
இந்த வரவேற்பை உற்சாகமாக ஏற்றுக்கொண்டு அவர்களை நோக்கி கையசத்தபடியே பிரதமர் நரேந்திர மோடி சென்றார். கலைஞர்கள், தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது கார் மெதுவாகவே சென்றது. சரியாக மாலை 6.25 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார்.
காவி உடை அணிந்த கலைஞர்கள்
பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுடன் சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருந்தனர். அவர்களுடன் காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகளி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.
விழா முடிவடைந்த பின்னர், நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நோக்கி தனது காரில் சென்றார். செல்லும் வழித்தடங்களிலும் பல இடங்களில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின் மீது மலர்கள் தூவி வாழ்த்தினர். இந்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டபடியே, அவர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் நரேந்திர மோடி சென்றார். கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று தங்கினார். இதனால் கவர்னர் மாளிகை அமைந்திருக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அண்ணாமலை சந்திப்பு
இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையிலான 18 பேர் அடங்கிய உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது மத்திய இணை மந்திரி எல்.முருகன் உடனிருந்தார்.
பிரதமர் நரேந்திரமோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் அவர் சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர் ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை, கவர்னர் மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.