பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி


பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி
x

பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலும் செஸ் போட்டிகளை நடத்திடவும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் முகாமை நடத்திடவும், அம்மாணவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, தேர்வுக்கூட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 234 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் 9-10, 11-12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும் செஸ் போட்டியில் முதலிடங்களை பிடித்த மாணவர், மாணவி ஒருவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர். மாவட்ட அளவில் 6-8, 9-10, 11-12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும் போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண அழைத்துச் செல்லப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தேர்வு கூட வளாகம் முன்பு ஒலிம்பியாட் போட்டியை குறிக்கும் வகையில் வண்ண உப்பு கற்களைக் கொண்டு ஒலிம்பியாட் சின்னம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை அனைவரும் ஆர்வமுடன் பார்த்தனர்.


Next Story