தீபாவளியை கொண்டாட கடல் கடந்து செல்லும் செட்டிநாட்டு பலகாரங்கள்


தீபாவளியை கொண்டாட கடல் கடந்து செல்லும் செட்டிநாட்டு பலகாரங்கள்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

செட்டிநாட்டு பலகாரங்கள்

தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து உறவினர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு சுவையான பலகாரங்களை கொடுத்து வாழ்த்து கூறுவது தான். கடந்த காலங்களில் ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது கை பக்குவத்தில் வீடுகளிலேயே பல சுவையான பலகாரங்களை செய்து சாப்பிட்டும், அதை தங்களது உறவினர்களிடம் கொடுத்தும் மகிழ்ந்து வந்தனர்.

ஆனால் கால போக்கில் தற்போது ரெடிமேடாக கடைகளில் விற்பனை செய்யப்படும் பலகாரங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு என்று தனி மவுசு உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகார பொருட்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நாட்கள், சுபநிகழ்ச்சிகளின்போது பலகாரங்கள் விற்பனை அதிகமாக நடைபெறும். அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே இந்த செட்டிநாடு பலகாரங்களுக்கு தனி மவுசுதான். அதற்கு காரணம் இங்கு தயாரிக்கப்படும் இந்த பலகாரங்கள் கை பக்குவத்தில் எவ்வித கலப்படம் இன்றி சுத்தமான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும்.

தயாரிக்கும் பணி தீவிரம்

அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்றளவும் செட்டிநாடு பலகாரங்கள் அமைந்துள்ளது. இங்கு 5 முதல் 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு, அதிரசம், மணகோலம், மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, பெரண்டை முறுக்கு, மாவு உருண்டை, காரா பூந்தி, மிக்சர், மைசூர்பாகு, மற்றும் ஜாங்கிரி உள்ளிட்ட பல்வேறு பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது இந்த பகுதியில் பலகாரங்கள் தயாரிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பலகாரங்கள் காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகளுக்கும்...

பலகாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கோட்டையூரை சேர்ந்த மெய்யம்மாள் ஆச்சி கூறியதாவது:- செட்டிநாடு பலகாரம் தயாரிக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுவதால் மிகவும் சுத்தமாகவும், கை பக்குவமாகவும் தயாரித்து வருகிறோம். சுத்தமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் பலகாரங்கள் 3 மாதம் வரை கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். இதுதவிர பலகாரம் தயாரிப்பு பணிக்கு பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்புகள் பயன்படுத்துவதால் அதன் சுவையும் மாறாமல் இருக்கும். தற்போது எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதால் கடந்தாண்டு விலையை விட ரூ.1 மட்டும் உயர்த்தி உள்ளோம். கடந்தாண்டை போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்காக அனுப்பப்பட உள்ளது என்றார்.

கெட்டுப்போகாத காரணம்

நவீனா திவாகர்(குடும்ப தலைவி):- செட்டிநாட்டு பாரம்பரியமிக்க பலகாரம் புகழ்பெற்றது. ஆண்டு முழுவதும் இங்கு பலகாரம் தயாரிக்கப்பட்டாலும் தீபாவளி நேரத்தில் தயாரிக்கப்படுவது விசேஷம். ஒருமுறை தங்கள் உறவினர்களுக்கு இந்த பலகாரத்தை வாங்கி கொடுத்தால் ஆண்டுதோறும் அவர்கள் இதை வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவுக்கு இவை சுவை மிகுந்தது என்றார்.

சுமித்ரா(சாப்ட்வேர் என்ஜினீயர்):- தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் செட்டிநாடு பலகாரம் தனி முத்திரை பதிக்கிறது. இங்குள்ள பலகாரங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு காரணம் செக்கு எண்ணெய். இதை பயன்படுத்துவதால் 3 மாதம் வரை பலகாரம் கெட்டுப்போகாது. இதனால் பல்வேறு மாவட்ட மக்கள் இதை விரும்பி வாங்குகின்றனர் என்றார்.


Next Story