சென்னை: கோவில் நகைகளை திருடிய சத்தீஸ்கர் இளைஞர் கைது
சென்னை தி.நகரில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் நகை திருடிய சம்பவத்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை தி.நகர், ராகவய்யா சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 25 வயது தினகர் திரிபாதி கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சமையல் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். ஏப்ரல் 19-ம் தேதியன்று அவர் திடீரென மாயமான நிலையில், சாமி சிலையில் இருந்த 20 சவரன் தங்க ஆபரணங்களும் மாயமாகி இருந்தன.
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது தினகர் திரிபாதி நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திரிபாதியைத் தேடி வந்தனர். அந்த சமயத்தில் திருடிய நகைகளை 6 லட்சம் ரூபாய்க்கு விற்ற திரிபாதி, மும்பை நட்சத்திர விடுதிகளில் தங்கியும், பின்னர் சொந்த ஊருக்குச் சென்றும் குடியும் கும்மாளமுமாக இருந்துள்ளார்.
அங்கு இருந்தால் அந்தப் பணம் முழுமையாக காலியாகி விடும் என நினைத்த தினகர் திரிபாதி தன்னிடம் இருந்த நான்கரை லட்சம் ரூபாயில் சென்னையில் சுயதொழில் செய்து பிழைத்துக் கொள்ள நினைத்து வாடகைக்குக் கடை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் போலீசில் வசமாக சிக்கினார். அவரது செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் அவரை பிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் இருந்த நான்கரை லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்த போலீசார் தினகர் திரிபாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.