சிதம்பரம்: ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடந்தும் நகராட்சித் துணைத்தலைவர்..!
சிதம்பரம் நகராட்சியின் துணைத் தலைவர் முத்துக்குமரன் தன் குடும்பத்துக்கான வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் முத்துக்குமரன். கடந்த 18 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வருகிறார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 33-ஆவது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுக கூட்டணியில், சிதம்பரம் நகராட்சியின் துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கட்சியின் முடிவுப்படி முத்துக்குமரன் நகராட்சி துணைத் தலைவராக ஆனார்.
நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, அலுவலகப் பணிகளை கவனிப்பது, நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவது, மக்களிடம் குறைகேட்பது என பொதுப் பணிகளைச் செய்துவருகிறார்.
இப்படி பொதுப்பணிகளை செய்யும் முத்துக்குமரன், தன் குடும்பத்துக்கான வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 22 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுவதே இவரின் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இப்போதும் அதைக் கைவிடாமல், மக்கள் பணியை முடிந்ததும், கௌரவம் பார்க்காமல், ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்செல்கிறார்.
நகர்மன்றத் துணைத்தலைவர் பதவியில் இருந்துகொண்டு, இப்படி ஆட்டோ ஓட்டுகிறாரே என சிலர் கிண்டல் செய்வதாக முத்துக்குமரன் தெரிவித்தார். தங்களுடன் ஆட்டோ ஓட்டிவரும் முத்துக்குமரன், பதவிக்கு வந்த பின்னரும் மாறிவிடவில்லை என சக ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.