குழந்தை திருமண விவகாரம் - சிதம்பரம் தீட்சிதர்கள் இருவர் சிறையில் அடைப்பு
குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக தீட்சிதர்கள் மீது பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு, காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் குழந்தை திருமணம் செய்த மாப்பிள்ளை, தாய், தந்தை, பெண் வீட்டு தாய், தந்தை என பல்வேறு நபர்களை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.குழந்தை திருமண வழக்கில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியலை கைவிடும்படி போலீசார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில் குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மாப்பிள்ளையின் தந்தை, பெண் குழந்தையின் தந்தை இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.28ஆம் தேதி வரை காவலில் வைக்க சிதம்பரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 தீட்சிதர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது