சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கேட்பு நிறைவுக்கு பிறகு அதிகாரி பேட்டி


சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்:  ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்  கருத்துக்கேட்பு நிறைவுக்கு பிறகு அதிகாரி பேட்டி
x

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கடலூரில் 2 நாட்களாக நடந்த கருத்துக்கேட்பு நிறைவுக்கு பிறகு அதிகாரி கூறினார்.

கடலூர்

கடலூர்,

தீட்சிதர்கள் எதிர்ப்பு

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இக்கோவில் வரவு- செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்று அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே 2 நாட்கள் ஆய்வுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக்குழுவுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.

மனுக்கள் பெறப்பட்டன

இந்த நிலையில் நடராஜர் கோவில் விசாரணை தொடர்பாக பொதுமக்கள், கோவில் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆலோசனை மற்றும் கருத்துக்களை கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது.

அதன்படி கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் சிறப்பு அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான சுகுமார் தலைமையிலான வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட குழுவிடம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.

ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்

இது பற்றி விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதியிடம் கேட்ட போது, சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் 2 நாட்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. இதில் நேரிலும், தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதன்படி நேற்று முன்தினம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 2-வது நாளான நேற்று 2011 மனுக்கள் என மொத்தம் 6,628 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் கோவிலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வந்துள்ளது.

இந்த மனுக்களை ஆய்வு செய்து, ஒரு வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது என்றார்.


Next Story