சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சுமூகமான நிலை ஏற்படும் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சுமூகமான நிலை ஏற்படும் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சுமூகமான நிலை ஏற்படும் என்று சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

கடலூர்

சிதம்பரம்,

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொதுதீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும்(புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்கள்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினர் தீட்சிதர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். இந்த குழுவினர் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் தீட்சிதர்கள் பதில் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இவ்வாறாக இந்து சமய அறநிலையத்துறையினரும், தீட்சிதர்களும் மாறி, மாறி நோட்டீசு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தரையில் அமர்ந்து ஆலோசனை

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவரை தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார்.

பின்னர் அவர், தரையில் அமர்ந்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுடன் கோவில் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.

சுமூகமான நிலை ஏற்படும்

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம். தீட்சிதர்கள் கோரிக்கைகளையும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நிலைப்பாட்டையும் கேட்டு அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆட்சியை பொறுத்தவரையில் ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த ஆட்சி அதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி. இன்னார், இனியவர் என்பது இல்லை. யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமூகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story