சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் பிச்சாவரம் ஜமீன் பேட்டி
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பிச்சாவரம் ஜமீன் கூறினார்.
கடலூர்
இந்து சமய அறநிலையத்துறை கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பிச்சாவரத்தை சேர்ந்த சோழ மன்னர் வம்சாவழி ஜமீன் பாளையக்காரர் ராஜா சூரப்ப சோழகனார் மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாளையக்காரர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் இரணியவர்ம சோழனால் தோற்றுவிக்கப்பட்டு சோழவம்ச மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழர்கள் பொற்கூரை வேய்ந்து ஆன்மிகம் வளர்த்தனர். அவர்கள் வழிவந்த சோழ வாரிசுகளே பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள். இந்த கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டது. நடராஜர் கோவில் பஞ்சாட்சரபடியில் அமர வைத்து பட்டாபிஷேகமும், முடிசூட்டு விழாவும் சோழ மன்னர் பரம்பரையினரான எங்களுக்கு செய்யப்படுவது வழக்கத்திலும், நடைமுறையிலும் இருந்து வருகிறது. இந்த கோவில் எங்களுடையது என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது.
கையகப்படுத்த வேண்டும்
ஆனால் தற்போது தீட்சிதர்கள் கோவிலின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கோவிலில் உரிமை உள்ளதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. தீட்சிதர்கள் கோவிலை சரியாக பராமரிக்கவில்லை. கணக்குகளை முறையாக கையாளவில்லை. ஆகவே தமிழக அரசு தனி அவசர சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.