நிலத்தகராறில் சித்தப்பா அடித்துக் கொலை


நிலத்தகராறில் சித்தப்பா அடித்துக் கொலை
x

குடியாத்தம் அருகே நிலத்தகராறில் சித்தப்பா அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் அருகே நிலத்தகராறில் சித்தப்பா அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நிலத்தகராறு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உப்பிரப்பல்லி கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு கோவிந்தசாமி, ரவி, பாபு என்ற 3 மகன்கள்.

அவர்களில் கோவிந்தசாமி, பாபு ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.

ரவி (வயது 60) விவசாயம் செய்து வந்தார். கோவிந்தசாமி, ரவி, பாபு ஆகியோருக்கு சொந்தமான நிலம் சம்பந்தமாக பல ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது.

கோவிந்தசாமி, பாபு ஆகியோர் குடும்பத்திற்கும், ரவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ரவிக்கு ராணி என்ற மனைவியும், புருஷோத்தமன், தீர்த்தகிரி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

புருஷோத்தமன் பால் வேன் டிரைவராகவும், தீர்த்தகிரி டிராக்டர் டிரைவராகவும் வேலைபார்த்து வருகின்றனர்.

தாக்கினார்

குடியாத்தத்தை அடுத்த மீனூர் சுண்ணாம்பு கொட்டை பகுதியில் ரவியின் அக்காள் லைலா வசித்து வருகிறார். ரவி அடிக்கடி தனது அக்காள் லைலா வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி போகி பண்டிகை அன்று இரவு லைலா வீட்டிற்கு சென்றிருந்த ரவியை அவரது அண்ணன் கோவிந்தசாமி மகன் ராஜேந்திரன் (28) அழைத்துச் சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே நிலம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. சத்தம்கேட்டு வீட்டில் இருந்த லைலா வெளியே வந்துள்ளார்.

அவரை, ராஜேந்திரன் ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு, தனது சித்தப்பா ரவியை சரமாரியாக தாக்கி உள்ளார். அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டனர்.

மேலும் வீட்டில் அறையில் சத்தம் கேட்கவே, அறையைத் திறந்து லைலாவையும் மீட்டனர். பலத்த காயமடைந்த ரவியை உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இது குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பெற்றுவந்த ரவி இன்று காலையில் ரவி பரிதாபமாக இறந்தார்.

அதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story