விஜய் படத்துக்கு சலுகை அளித்தும் அரசு மீது வீண் பழி தலைமை குற்றவியல் வக்கீல் பேட்டி


விஜய் படத்துக்கு சலுகை அளித்தும் அரசு மீது வீண் பழி தலைமை குற்றவியல் வக்கீல் பேட்டி
x

மற்ற படங்களை போல விஜய்யின் லியோ படத்துக்கும் பாரபட்சம் இல்லாமல் சலுகை வழங்கியும், அரசு மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்று மாநில தலைமை குற்றவியல் வக்கீல் கூறியுள்ளார்.

சென்னை.

விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்துக்கான அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு விடை காண, லியோ பட வழக்கில் அரசு தரப்புக்கு ஆஜரான மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னாவிடம் கேட்டபோது, "சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படிதான் இதுவரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அரசை பொறுத்தவரை அனைவரையும் சரிசமமாகத்தான் பார்க்கிறதே தவிர, எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை. லியோ படத்துக்கு மட்டுமல்ல, எந்த படத்துக்கும் அதிகாலை காட்சிக்கு இதுவரை அரசு அனுமதியே வழங்கியது இல்லை" என்றார்.

ரஜினி படத்துக்கு அனுமதி?

கேள்வி:- ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்:- அது தவறான தகவல். ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு மட்டுமல்ல, கமல்ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு, சிம்புவின் பத்துதல என்று எந்த படங்களுக்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதியில்லாமல், காலை 9 மணிக்கு முன்பு வாரிசு, துணிவு, பத்துதல படங்களை திரையிட்ட சில தியேட்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அபராதம் விதித்துள்ளது.

ரஜினியின் ஜெயிலர் படத்தை காலை 8 மணிக்கு வெளியிட்ட தியேட்டருக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசியல் நெருக்கடியா?

கேள்வி:- விஜய் அரசியலுக்கு வருவதால்தான் இதுபோல நெருக்கடி ஏற்படுத்துவதாக சில அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனரே?

பதில்:- அரசியல் தலைவர்களின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

கேள்வி:- ஏற்கனவே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் போலீசார் அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்:- லியோ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது, ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்டவைகளால் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுபோன்ற குளறுபடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பின் அவர்கள் அனுமதி கேட்கவில்லை. கேட்டிருந்தால், போலீசார் அனுமதி வழங்கியிருப்பார்கள். சட்டப்படி என்ன சலுகைகள் வழங்க முடியுமோ அதை அரசு வழங்கும்.

வீண் பழி

கேள்வி:- அந்த சலுகை ஏன் விஜய் படத்துக்கு வழங்கவில்லை?

பதில்:- மற்ற படங்களைப் போலத்தான் லியோ படத்துக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இன்று முதல் 24-ந் தேதி வரை 6 நாட்களுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. உண்மை இப்படி இருக்க அரசு மீது சிலர் வீண் பழி சுமத்துகின்றனர். தேவையில்லாமல் ரசிகர்களை தூண்டும் விதமாக வீண் வதந்திகளை பரப்புக்கின்றனர்.

கேள்வி:- அரசின் மீது வீண் பழி சுமத்துவதை தடுக்க என்ன செய்யலாம்?

பதில்:- ஆடியோ வெளியீடு, புதிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள், இசை நிகழ்ச்சி தொடர்பாக நிலையான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக உள்துறை முதன்மை செயலாளருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story