'பாரம்பரியமிக்க ஐகோர்ட்டில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்' தலைமை நீதிபதி பேச்சு
பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என்று வழியனுப்பு விழாவில் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி பேசினார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வுபெற்றதை தொடர்ந்து, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 13-ந் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற எம்.துரைசாமி, நேற்று ஓய்வுபெற்றார். அதையடுத்து அவருக்கு ஐகோர்ட்டு சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.ராஜா, பரேஷ் உபாத்தியா, பி.என்.பிரகாஷ், எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமியின் தாயார் ராஜேஸ்வரி, மனைவி கலைவாணி உள்ளிட்ட அவரது உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமியை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் பேசினார்.
அதற்கு நன்றி தெரிவித்து பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி பேசியதாவது:-
பாரம்பரிய முறையில் மிகைப்படுத்தாமல் என்னுடைய நல்ல பணியை பாராட்டிய அட்வகேட் ஜெனரலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறந்த வக்கீல்கள்
நான் நீதிபதியாக பொறுப்பு ஏற்றபோது, சட்டத்துக்கு உட்பட்ட இந்த ஐகோர்ட்டின் உயர்ந்த மதிப்பு, மரியாதையை நிலைநாட்டும்விதமாக என் நீதி பரிபாலனம் இருக்கும் என்று கூறினேன். அதன்படி பணியாற்றியுள்ளேன். அதற்கு உதவியாக இருந்த சக நீதிபதிகள், வக்கீல்கள் என்று அனைவருக்கும் நன்றி.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் நாட்டிலேயே தலைசிறந்தவர்கள். அதிலும், 2-ம் தலைமுறை வக்கீல்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர். பாரம்பரியமிக்க இந்த ஐகோர்ட்டில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று பதவி ஏற்பு
பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி ஓய்வுபெற்றதை தொடர்ந்து, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி டி.ராஜா புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) காலை பதவி ஏற்க உள்ளார்.