மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு


மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு
x

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், சீர்காழி தாலுகா பச்சை பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமிற்கு சென்றார்.

அங்கு நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், அந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிஸ்கட் வழங்கினார்.

பொதுமக்களுக்கு ஆறுதல்

சீர்காழி அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் 183 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. உமையாள்பதி காலனியில் கனமழையால் தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 4 நாட்கள் ஆகியும் வடியாமல் தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.அப்போது உமையாள்பதி காலனியில் கடந்த 1994-ம் ஆண்டு கட்டப்பட்ட 40 தொகுப்பு வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும், உமையாள்பதி மேலத்தெரு, அப்பர் கோவில் தெரு மக்கள் பயன்பெறும் வகையில் சாலை வசதி, பாலம் வசதி செய்து தர வேண்டும் எனவும், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

அழுகிய நெற்பயிர்கள்

பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி இருந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது விவசாயிகள், வயலில் தேங்கிய இடுப்பளவு தண்ணீரில் இறங்கி தண்ணீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தனர். அந்த நெற்பயிர்களை முதல்-அமைச்சர் கையில் வாங்கி பார்த்தார். அப்போது விவசாயிகள், நடவு செய்த 40 நாட்களில் நெற்பயிர்கள் மூழ்கி விட்டது என்றனர்.பின்னர் அதே பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பாதிப்பு குறித்து அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அவரிடம் உமையாள்பதி கிராமத்தில் 221 எக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோ காட்சிகள்

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 66 ஆயிரத்து 888 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 34 ஆயிரத்து 852 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது எனவும், கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 250 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் 421 எக்டேர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அங்கே பல்வேறு கிராமங்களில் தண்ணீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்வையிட்டார். மேலும் அவர், பாதிப்பு நிலவரம் குறித்து வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதையும் பார்த்தார். பின்னர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை அழைத்து பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

அச்சப்பட வேண்டாம்

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சீர்காழிக்கு வந்தார். அங்கு புதிய பஸ் நிலையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஆலோசனை

முன்னதாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்தும், பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, செந்தில்பாலாஜி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நெற்பயிர் கணக்கெடுப்பு

ஆய்வு முடிவில் சீர்காழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால்தான், இங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைத்து உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு, நிவாரண பணிகள் திருப்தியாக உள்ளன. இன்னும் சில குறைகள் உள்ளன. அவை விரைவில் தீர்த்து வைக்கப்படும்.சேதம் அடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தி உள்ளேன். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக ஏதாவது சொல்வார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

.



Related Tags :
Next Story