நீட் தேர்வை ரத்து செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட போராட்டத்தை நடத்துகிறார்
நீட் தேர்வை ரத்து செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட போராட்டத்தை நடத்துகிறார்
நீட் தேர்வை ரத்து செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட போராட்டத்தை நடத்துகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
அமைச்சர் ஆய்வு
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத்திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக பிரமாண்டமான அளவில் பந்தல் அமைத்து அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை புத்தகத்திருவிழாவில் 104 அரங்குகள் அமைக்கப்படுகிறது. இந்த அரங்குகளில் இலக்கிய புத்தகங்கள், வரலாற்றில் பதிவு செய்த தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் என பலவிதமான புத்தகங்கள் இடம் பெறும். புத்தக வாசிப்பு பெரியவர்களுக்கு மட்டும் இல்லை. சிறு குழந்தைகளையும் புத்தக திருவிழாவுக்கு அழைத்து வந்து புத்தகங்கள் வாசிப்பை பழக்கப்படுத்த வேண்டும்.
இல்லம் தேடி கல்வி
ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் இல்லம் தேடி கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. கல்வியாக இருந்தாலும் சரி, புத்தக வாசிப்பாக இருந்தாலும் சரி அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அனைவரும் உணரும் வகையில் இந்த நிகழ்வு இருக்கும். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவுவதால் அரசின் கொரோனா வழிகாட்டு வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பள்ளி வளாகத்தில் நுழையும் போது கிருமிநாசினியை கைகளில் தெளிக்க வேண்டும். தெர்மல் மீட்டர் கொண்டு உடல் வெப்பநிலையை கண்டறிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
அறிவித்தால் மட்டும் போதாது ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி நானே பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் ஏற்கனவே எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பில் 93 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது புதிதாக 52 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நியமித்த பிறகு முன்புபோல் முழுமையாக எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடைபெறும்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 5 லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளையும் சேர்த்து 7 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் எனச் சேர்த்தால் 9 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு
அரசு பள்ளிகளில் நிறைய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. நீட்டை பொருத்தவரை 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்காக அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். அதே நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். கட்சி பாகுபாடு இன்றி அனைத்து எம்.எல்.ஏ., க்களும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரக்கூடாது என போராடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.