முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்
x

காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று, கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கூறினாா்.

திருவாரூர்

கொரடாச்சேரி;

காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று, கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கூறினாா்.

ஒன்றியக்குழு கூட்டம்

கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியாபாலச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-

நாகூரான்: உத்தரங்குடி ஊராட்சியில் குமரமங்கலம், மேல உத்தரங்குடி, சிட்டிலிங்கம் உள்ளிட்ட இடங்களில் சாலை வசதி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.இதுவரை என்னுடைய ஊராட்சியில் பணிகள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் வடிகால் கட்டும் பணியால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்வோர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.

காவிரி நீர்

ஏசுராஜ்: பெரும்புகழூர், தியாகராஜபுரம், வண்டாம்பாளை ஆகிய இடங்களில் சாலை வசதி அமைத்து தர வேண்டும். பெரும்புகழூர் அங்கன்வாடி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வண்டாம்பாளை ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களையும் ஊராட்சி குளங்கள் என அறிவித்து தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

ஆனந்தன்: காவிரியில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் குறுவைப் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை பாதுகாக்கும் வகையில் காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற்று விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.மீரா: மேலராதாநல்லூர் சாலைகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு உறுப்பினர்கள் கூறினர்.

முதன்மை ஒன்றியம்

ஒன்றியக்குழு தலைவர் உமா பிரியா: கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேவைப்படும் பணிகளுக்கு பணியின் முக்கியத்துவம் கருதி முன்னுரிமை அடிப்படையில் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து முதன்மை ஊராட்சி ஒன்றியமாக கொரடாச்சேரி ஒன்றியத்தை மாற்றுவோம்.மகளிர் உரிமைத்தொகை தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை ஒன்றியக் குழு கூட்டம் நடக்கும் வரை காத்திருக்காமல் உடனுக்குடன் தெரிவித்து சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா கூறினார். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், வாசு, சபீனா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story