மாற்றுத் திறனாளி சிறுவன் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின்

கீழ்பென்னாத்தூரில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி சிறுவன் வீட்டிற்கு சென்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கீழ்பென்னாத்தூரில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி சிறுவன் வீட்டிற்கு சென்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
மாற்றுத் திறனாளி சிறுவன்
கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, டிரைவர். இவரது மனைவி தமிழரசி, விவசாய கூலி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகன் சிவானந்தம் (வயது 14). மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி. இவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடு வாங்குவதற்காக வட்டியில்லா கடன் பெற்று உள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் இல்லம்தோறும் மேற்கொண்ட கள ஆய்வின் போது, சிவானந்தம் ஒன்றரை வயதாக இருக்கும்போது மூளை முடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு தொடர்ந்து இயன்முறை பயிற்சி மற்றும் ஆரம்பகல்வி வழங்கப்பட்டது.
இவருக்கு ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தசைப்பயிற்சி உபகரணங்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள சிறப்புக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலமாக அவருக்கு இல்லத்திற்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் சிறப்புக்கல்வி வழங்கப்பட்டு, தற்போது அவர் 10-ம் வகுப்புக்கான பாடங்கள் கற்பித்தலும் வழங்கப்பட்டு வருகிறது.
இவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக கடந்த 3 ஆண்டுகளாக ரூ.1,500 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
முதல்- அமைச்சர் நலம் விசாரித்தார்
மேலும் கூடுதலாக உதவியாளருக்கான உதவித்தொகையும் இம்மாதம் முதல் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இத்துடன் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு சக்கரநாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வந்தார்.
அவர் மாற்றுத் திறனாளி சிறுவன் சிவானந்தம் வீட்டிற்கு நேரில் சென்று, அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விவரங்களை கேட்டறிந்து அவருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார்.
தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த கோரிக்கை மனுவையும் முதல்- அமைச்சர் பெற்றுக் கொண்டார்.
அப்போது பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ. வேலு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ''வீட்டுவழிக் கல்வியில் மூளை முடக்குவாதம், அறிவுசார் இயலாமை, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள், மன இறுக்கம் போன்ற அதிக பராமரிப்பு தேவைப்படும் குறைபாடுகளை உடைய 10 ஆயிரத்து 146 குழந்தைகளுக்கு, அவர்களின் தேவைகளை கண்டறிந்து பொருத்தமான உதவி உபகரணங்கள் மற்றும் உரிய இயன்முறை பயிற்சிகள் மட்டுமல்லாது உதவித் தொகையும் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இக்குழந்தைகளை கையாளும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ரூ.838 கோடியே 1 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தி வருகிறது.
2022-23-ம் ஆண்டு உதவி உபகரணங்களுக்காக ரூ.51 கோடியே 18 லட்சம் ஒதுக்கப்பட்டு 3 சக்கரவண்டிகள், சக்கரநாற்காலிகள், பெட்ரோல் பயன்படுத்தும் ஸ்கூட்டர்கள், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஊன்றுகோல், உருப்பெருக்கி, காதொலிக்கருவி, மனவளர்ச்சி குன்றியோருக்கான மாற்றுவழியில் தொடர்புகொள்ளும் 'ஆவாஸ்' மென்பொருளுடன் கூடிய கையடக்க கருவி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பயனாளிகள் விரும்பும் உபகரணங்களை தாமே தெரிவு செய்துகொள்ளும் திட்டத்தின்கீழ் 8 ஆயிரத்து 436 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 77 கோடி செலவில் உபகரணங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றனர்.